வரும் இடைத்தேர்தலில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகக் கடுமையான அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது. 2026 பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றிகண்ட இத்தொகுதியில், சுமார் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது அக்கட்சி தலைமைக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் காங்கிரஸ், விசிக போன்ற கூட்டணி தோழமைக் கட்சிகளுக்கும் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வாக்கு வங்கியோ செல்வாக்கோ இல்லாத சூழலில், அங்கு போட்டியிடும் தவெக முற்றிலும் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட பிரசார வலிமையையும் மக்கள் செல்வாக்கையும் மட்டுமே முழுமையாக நம்பிக் களமிறங்குகிறது. இந்த இடைத்தேர்தல் வெற்றி தவெகவின் கொங்கு மண்டல செல்வாக்கை தீர்மானிக்கும் முக்கிய களமாகக் கருதப்படுவதால், அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சி தலைமை வியூகம் வகுத்து வருகிறது.
