மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்ற மாடுபிடி வீரர்கள் ஆவார்.
நேற்று இரவு இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். நகரி பகுதியில் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத கனரக லாரியிலிருந்து பெரிய இரும்புப் பொருள் ஒன்று திடீரெனத் தவறி இவர்கள் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த சோழவந்தான் போலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கனரக வாகனத்தை அடையாளங்காண போலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே விபத்தில் இரு ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சித்தாலங்குடி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
