ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கே, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க தவெக தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான தவெகவில் அதிகாரப்பூர்வமாகத் இணைந்தனர்.
தற்போது அந்தந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், கட்சி மாறிய போதிலும் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழும் அதே மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருக்குமே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க பனையூர் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்து கட்சிக்கு வந்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையிலும், தொகுதியில் அவர்களுக்குள்ள கள அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் விஜய் இந்தத் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
