கான்பூர் தேஹத் மாவட்டம் துரௌலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான கஜேந்திர சங்க்வார் என்பவருக்கு ஏற்கனவே மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், அவர் அஸ்மா என்ற முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, தன் முதல் மனைவியையும் மகனையும் கைவிட்டு நீதிமன்றத்தில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அஸ்மா தனது மதத்தையும் பெயரையும் ‘சப்னா’ என்று மாற்றிக்கொண்டார்.
திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சப்னா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது கஜேந்திரனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. “என்னை சந்தேகப்படுகிறாயா?” என்று சப்னா தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரமடைந்த கஜேந்திர இரும்பு கம்பியால் சப்னாவின் மண்டையில் பலமாகத் தாக்கினார்.
தாக்குதலுக்குப் பின், கஜேந்திரனே காவல்துறைக்குத் தொடர்பு கொண்டு தன் மனைவியைக் கொன்றுவிட்டதாகக் ஒப்புக்கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சப்னாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கஜேந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
