அசாம் மாநிலம் ஜோர்காட் மாவட்டத்தின் மாரியானி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, அவரது தாய் மாமா சாகர் கோஷ் மற்றும் அவரது மனைவி மனிஷா கோஷ் ஆகியோர் பொய்யான காரணங்களைக் கூறி ஏமாற்றி கடத்திச் சென்றுள்ளனர். சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், கடத்தல்காரர்கள் மாலை 5 மணியளவில் சிறுமியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, இரவு 8 மணிக்குள் ரூ.60 லட்சம் பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்றும், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தால் சிறுமியைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமியின் தந்தை உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், தீவிரத் தேடுதலுக்குப் பின் இரவு சுமார் 2 மணியளவில் தேர்கான் பகுதியில் உள்ள இஸ்லாம்கர் எனும் இடத்தில் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் தாய் மாமா சாகர் கோஷை கொய்லகடாவிலும், அவரது கூட்டாளி வாசிம் ரஹ்மானை இஸ்லாம்கரிலும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்றுமொரு குற்றவாளியைப் பிடிக்கப் பொலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
