கிழக்கு டெல்லியின் மயூரி விஹார் ஃபேஸ்-3 பகுதியில் 42 வயதான தரம்வீர் தனுவா என்ற கூட்ஸ் வாகன ஓட்டுநர் மரக்கட்டைகளால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துர்கா கோவில் அருகே மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவரை, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக நியூ அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இக்கொலை தொடர்பாக 22 வயது நபர் மற்றும் அவருடைய 17 வயது மருமகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். பலியான தரம்வீருக்கும், அந்த சிறுவனின் தாயாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் தரம்வீரின் குடிசையில் இருந்ததை சிறுவன் பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து தனது மாமாவிடம் தெரிவிக்கவே, இருவரும் சென்று தரம்வீரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதில், இருவரும் சேர்ந்து தரம்வீரை மரக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பாதுகாப்புக் காவலர் தடுக்க முயன்றபோதும், அவரையும் மிரட்டிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், ரகசியத் தகவலின் அடிப்படையிலும் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல்துறையினர் பிடித்தனர்.
