அசாம் மாநிலம் குவஹாத்தியின் பசிஸ்தாபூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருமணமாகி 6 மாதங்களே ஆன ரியா தாலுக்தார் கோஸ்வாமி (25) என்ற பெண் தனது கணவர் ராமானுஜன் கோஸ்வாமியுடன் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி, அவர்களின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவைத் திறந்து பார்த்தபோது, ரியாவின் உடல் துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டின் பிரிட்ஜைத் திறந்து சோதனையிட்டபோது, பாலித்தீன் பையில் ரியாவின் துண்டிக்கப்பட்ட தலையும், விரல்களும் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவம் நடந்ததிலிருந்து தலைமறைவாக இருந்த கணவர் ராமானுஜன், ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையிடம் சரணடைந்தார். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், 48 மணி நேரத்திற்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
