திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம், பெத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவரது விவசாயக் கிணற்றில், இரு சிறுவர்களின் சடலங்கள் அழுகிய நிலையில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆலங்காயம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து சடலங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த ஆறு நாட்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கிணற்றில் சடலமாகக் கிடந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், வெளிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு – சிவகாமி தம்பதியினரின் மகன்களான பிரதாப் (5) மற்றும் பிரேம்குமார் (2) என்பது தெரியவந்தது. சிவகாமிக்கும் அவரது கணவர் சேட்டுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே சேட்டு செம்மரக் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனிமையில் இருந்த சிவகாமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கள்ளத்தொடர்பின் காரணமாக சிவகாமி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். அப்போது ராஜா, “நமக்குத்தான் புதிதாகக் குழந்தை பிறக்கப் போகிறதே, இனி இந்த இரண்டு மகன்கள் எதற்கு?” என்று சிவகாமியிடம் கேட்டுள்ளார். இதனால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த பெற்ற தாயே, இரு பிஞ்சுக் குழந்தைகளையும் கொலை செய்யத் துணிந்துள்ளார். திட்டமிட்டபடி, இரு குழந்தைகளையும் ஆலங்காயம் பகுதிக்கு அழைத்து வந்து, அங்கிருந்த ஆள் நடமாட்டமில்லாத விவசாயக் கிணற்றில் அடுத்தடுத்து வீசிவிட்டுத் தப்பிச் சென்றது காவல்துறையினரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, பெற்ற பிள்ளைகளையே கொடூரமாகக் கொலை செய்த தாய் சிவகாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் ராஜா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தனது கள்ளக்காதலுக்காக இரண்டு பிஞ்சு மகன்களைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
