சென்னை வண்ணாந்துறையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாகவே இந்த ரத்தவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படுகொலை செய்யப்பட்ட கண்ணன் சமீபத்தில்தான் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
