சிராக் கோதாரி என்ற வாலிபர் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில், அவரது மெடிகிளைம் இன்சூரன்ஸ் கோரிக்கை திடீரென நிராகரிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “உங்கள் ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை 1 லட்சமாக உள்ளது. பிளேட்லெட்ஸ் 70,000க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே டெங்கு தீவிரமாகக் கருதப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க அனுமதி வழங்கப்படும்” எனக் கூறி இன்சூரன்ஸ் தொகையைத் தர மறுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பிரீமியம் தொகையை வாங்கும்போது அத்தனை சலுகைகளைச் சொல்கிறார்கள், ஆனால் ஆபத்து நேரத்தில் பணத்தைத் தர மறுக்கிறார்கள்” எனப் பலரும் தங்களது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். விவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மணிப்பால் சிக்னா நிறுவனம் சிராக் கோதாரியின் கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
