“ராகுல் இல்ல.. விஜய்தான் PM”…. கொந்தளித்த காங்கிரஸ், கலக்கத்தில் இடதுசாரிகள்…. மோடிக்கு அடித்த ‘மெகா லக்கி பிரைஸ்’….. கூட்டணியில் உச்சக்கட்ட விரிசல்..!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் சென்னை வந்த ராகுல் காந்தியின் தூதர்களை விஜய் சந்திக்க மறுத்ததாக வெளியான செய்திகளும், “ராகுல்தான் பிரதமர் வேட்பாளர், விஜய் தமிழக முதலமைச்சராகத் தொடரட்டும்” என்ற காங்கிரஸின் திட்டவட்டமான நிலைப்பாடும் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.

மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டபோது, பாஜக போன்ற சக்திகளைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் ‘மதச்சார்பற்ற அரசு’ என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே கூட்டணிக் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. எனினும், ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே தவெகவினர் விஜய்யை தேசிய அளவிலான தலைவராகச் சித்தரிக்கத் தொடங்கியிருப்பது, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதையே முதன்மை இலக்காகக் கொண்ட கூட்டணித் தலைவர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

   

பாஜகவுக்கு எதிரான மக்கள் மனநிலை வலுவாக இருக்கும் தென்மாநிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் விஜய் தனித்துப் போட்டியிட்டால், எதிர்க்கட்சிகளின் மதச்சார்பற்ற வாக்குகள் தவெக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடுமையாகச் சிதறும் என விசிகவும் இடதுசாரிகளும் அஞ்சுகின்றன. இவ்வாறு பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரிவது, மறைமுகமாக நரேந்திர மோடி மீண்டும் எளிதாக வெற்றி பெறுவதற்கே வழிவகுக்கும் என்றும், விஜய்யின் இந்த அவசர அரசியல் நகர்வு பாஜகவுக்கு அளிக்கப்படும் மறைமுகப் பரிசாக அமைந்துவிடும் என்றும் கூட்டணிக் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

   

அரசு அமைந்த குறுகிய காலத்திலேயே பொதுவெளியில் வெடித்துள்ள இந்த அதிகார மோதல், ஆளும் கூட்டணியின் எதிர்காலத்தையும் நிலைத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. விலைவாசி உயர்வு போன்ற மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் ஏற்கனவே அதிருப்தி நிலவும் சூழலில், தவெகவின் இந்தத் தனி ஆவர்த்தனம் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, பாஜகவுக்கு எதிரான அரசியல் களத்தைப் பலவீனப்படுத்திவிடுமோ என்ற அச்சமும் பதற்றமும் தற்போது தமிழக அரசியல் அரங்கில் மேலோங்கியுள்ளது.