புதுச்சேரி அருகே ஏம்பலத்தில் அமைந்துள்ள தியான பீடத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, இதில் பங்கேற்க ‘கைலாசா’ நித்யானந்தா புதுச்சேரிக்கு வரவுள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தியான பீட நிர்வாகிகள் புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தரும்போது மாநில அரசு அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிர்வாகிகள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையைக் கேட்ட முதல்வர் ரங்கசாமி, “அவர் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சட்டச் சிக்கல்கள் மற்றும் வழக்குகளில் சிக்கிப் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நித்யானந்தா, 2020-ஆம் ஆண்டில் ‘கைலாசா’ என்ற தனித் தீவு நாட்டை உருவாக்கியதாக அறிவித்து அங்கிருந்து செயல்பட்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தியாவுக்கு, குறிப்பாக புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தி தியான பீட நிர்வாகிகளின் சந்திப்பிற்குப் பின் வெளியாகி மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
