“கறிக்குழம்பு வைக்கலையா?”…. ஒரு கிண்ணம் குழம்புக்காக மனைவியை உயிரோடு முடித்த கணவன்… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில் தனது மனைவி பசீலாவை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுப்பழக்கம் கொண்ட ரஷீத், தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பணிக்குச் செல்லும் முன், மதிய உணவுக்குக் கறிக்குழம்பு சமைத்து வைக்குமாறு மனைவியிடம் ரஷீத் கூறியுள்ளார். ஆனால், மதியம் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கறிக்குழம்பு சமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரஷீத், மனைவி பசீலாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

   

வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி எதிர்த்துப் பேசியதால் மேலும் கோபமடைந்த ரஷீத், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து பசீலாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். கணவனின் திடீர் தாக்குதலைத் தடுக்க முயன்றும் முடியாத பசீலா, பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

   

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பலனின்றி பசீலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் வண்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவியைப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோட முயன்ற ரஷீத்தைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.