மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பரளி நகரைச் சேர்ந்த ‘தஹிபாலே’ குடும்பத்தில், கடந்த நான்கு தலைமுறைகளாக அதாவது சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக எந்தவொரு பெண் குழந்தையும் பிறக்கவில்லை.
இந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு ‘கல்கி ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய குழந்தையையும் அதன் தாயையும், குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் பிரமாண்டமான முறையில் வரவேற்றனர்.
குழந்தையை அழைத்து வர பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட தேரும், மேளதாள வாத்தியங்களும், வாணவேடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. பாரம்பரியமாக ஆண் குழந்தை பிறக்கும்போது மட்டும் கொண்டாடப்படும் மகிழ்ச்சியைப் போல, பெண் குழந்தையின் பிறப்பையும் ஊரே வியக்கும் வண்ணம் இனிப்புகள் வழங்கி குடும்பத்தினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.
