மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆகஸ்ட் 31 அன்று பதிவான இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் விகாஸ் குட்டேவின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், நபர் ஒருவர் திடீரென விகாஸ் குட்டேவை கத்தியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சமதா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://twitter.com/nextminutenews7/status/2095129583867854963/video/1
இந்தத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன, முன்விரோதம் ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் சதியா என்பது குறித்துக் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மர்ம நபரை விரைவில் கைது செய்வதற்காகப் அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி பதிவுகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
