நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம் தெரியாமல் அழித்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1,130-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் நேபாளத்தில் 1,114 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சீன எல்லைப் பகுதியில் 16 பேர் பலியாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி 4,462-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 800-க்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் உறவினர்களின் உடல்கள் கிடைக்காததால், சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் வேறு வழியின்றித் தர்பைப் புல்லால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகளை எரித்து இறுதிச்சடங்குகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன கணவருக்குத் தர்பைப் புல் உருவப் பொம்மை மூலம் இறுதிச்சடங்கு செய்த டோல்மா நெவார் தமாங் என்ற பெண், சீனா நோக்கிப் பயணித்த தன் கணவர் தொலைபேசியில் கிடைக்காத நிலையில், அவர் ஆன்மா சாந்தியடைவதற்காகக் கண்ணீருடன் இந்தச் சடங்கைச் செய்வதாக வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இவரைப் போல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களின் அன்பிற்குரியவர்களை நேரில் காண முடியாமல் இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பேரழிவு நடந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில் உறைந்துள்ள அடர்ந்த சேற்றைத் தோண்டியும் வெடிவைத்தும் நேபாள மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடர்ந்து வருகின்றனர். “ஏதேனும் அற்புதங்கள் நிகழலாம் என்ற சிறிய நம்பிக்கையுடன் தேடுகிறோம்” என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார். இதனிடையே, சவக்கிடங்குகள் உடல்களால் நிரம்பி வழியும் நிலையில், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான சடலங்களின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரித்த பின் அதிகாரிகள் அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர்.
