மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் (37) என்ற பெண், தனது கணவர் வேத் பிரகாஷ் பாதக்கை விட்டுப் பிரிந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜீவ் ரிஷி ராஜ் என்பவருடன் பஞ்சாப் மாநிலம் ஜீரக்பூர் தசமேஷ் நகரில் வாடகை வீட்டில் லிவ்-இன் முறையில் இணைந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய கணவர் வேத் பிரகாஷ், பூனமின் சகோதரருடன் செவ்வாய்க்கிழமை காலை அவளது வீட்டிற்கு வந்துள்ளார். தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வேத் பிரகாஷ் வற்புறுத்தியுள்ளார். ஆனால், பூனம் வர மறுத்ததால் கணவனுக்கும், லிவ்-இன் கூட்டாளி ராஜீவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் வேத் பிரகாஷ், ராஜீவை அறைந்துள்ளார். இதைத் தடுக்க பூனம் ஓடிவந்தபோது, தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பூனமை அடுத்தடுத்து பலமுறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் பூனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க முயன்றவர்களை மிரட்டிவிட்டு வேத் பிரகாஷ் கத்தியுடன் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஜீரக்பூர் போலீசார், தலைமறைவாக உள்ள கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
