கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் தனியாக வசித்து வந்த 78 வயதான சின்னம்மாள் என்ற மூதாட்டி கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியின் வீட்டிலிருந்து புகை வெளியேறியதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவர் ரத்தக் காயங்களுடனும், தலையின் முடி மற்றும் கைகள் தீயில் எரிக்கப்பட்ட நிலையிலும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலிலிருந்தும் பீரோவிலிருந்தும் சுமார் 35 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கோட்டார் போலீஸ் தனிப்படையினர், ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து சென்ற விருதுநகரைச் சேர்ந்த வேல்ராஜ் (எ) விக்னேஷ் (33) என்பவரைக் கண்டறிந்தனர். மூதாட்டியின் பக்கத்து மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்த வேல்ராஜ், வேலை இல்லாததால் மூதாட்டியிடம் பணம் கேட்டுத் தகராறு செய்து, அவரை முகத்தில் அடித்துக் கொலை செய்துள்ளார்.
தடயங்களை அழிக்கக் கேஸ் அடுப்பைப் பற்றவைத்து மூதாட்டியின் தலை மற்றும் கையை எரித்துவிட்டு நகைகளுடன் தப்பியுள்ளார். பின்னர் தன் சகோதரர் அரவிந்தை வரவழைத்து நகைகளுடன் தப்ப முயன்றபோது, இருவரும் மது அருந்திக் கொண்டிருந்த இடத்தில் வைத்துப் போலீஸார் அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
