நடப்பு 2026-ம் ஆண்டு உலகெங்கிலும் வெள்ளம், நிலநடுக்கம், புயல் மற்றும் கொடிய வெப்ப அலைகள் என அடுத்தடுத்த இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. இந்தத் தொடர் பேரழிவுகள் தற்செயலானவையா அல்லது பருவநிலை மாற்றத்தின் புதிய எச்சரிக்கையா என்ற அச்சம் மக்களிடையேயும் அறிவியலாளர்களிடையேயும் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த பல பெரும் துயரங்களுக்கும் ’26’ என்ற எண்ணிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதும், அந்தத் தேதியில் முக்கிய இயற்கை அழிவுகள் நடைபெறுவதும் பலரது கவனத்தை ஈர்த்து விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க நாடுகளில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம், மடகாஸ்கரைத் தாக்கிய தொடர் சூறாவளிகள், மற்றும் காங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகியவை எண்ணற்ற உயிர்களைப் பலிவாங்கின. ஐரோப்பாவில் வீசிய கடுமையான வெப்ப அலைகளால் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், வெனிசுலா மற்றும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கங்கள் பெரும் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தின. இதற்குச் சிகரம் வைத்தாற்போல், சமீபத்தில் நேபாள – திபெத் எல்லையில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் பல கிராமங்களை அழித்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.
இயற்கை தன்பாட்டில் செயல்படுவதை விடுத்து, அதன் மீது மனிதன் செலுத்தும் ஆதிக்கமே இத்தகைய தொடர் சீற்றங்களுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஆறுகளின் வழித்தடங்களை மாற்றுவது, மலைகளைக் குடைந்து சாலைகள் அமைப்பது, வணிக நோக்கத்திற்காக இயற்கையைச் சுரண்டுவது போன்ற மனிதனின் சுயநலச் செயல்கள் பேரிடர்களின் தீவிரத்தை அதிகரிக்கின்றன. இயற்கையைத் தோற்கடித்துவிடலாம் என்ற மனிதனின் அகந்தை, இதுபோன்று இயற்கை சீறும் போது தவிடுபொடியாகி விடுகிறது. இனியாவது இயற்கைக்கு எதிரான அத்துமீறல்களைக் கைவிட்டு, அதனைப் பாதுகாத்து அதனுடன் இணைந்து வாழப் பழகிக் கொள்வது மட்டுமே மனித குலத்தின் எதிர்காலத்தைக் காக்கும்.
