“வேலை செய்தவனுக்கு வேட்டா?…ஆப்பு வச்ச அறிவாலயம்?”…. ரகசிய குழு’ கொடுத்த ரிப்போர்ட்… உச்சக்கட்ட டென்ஷனில் ஸ்டாலின்….!

By Nanthini on ஆவணி 30, 2026

Spread the love

சமீபத்தில் நடைபெற்ற 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும் திமுக சந்தித்த எதிர்பாராத பின்னடைவு, அக்கட்சியின் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக தமிழக அரசியலில் ஆட்சியை அலங்கரித்து வந்த திமுக, இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் ஆட்சியை இழந்ததுடன், முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினின் தோல்வியையும் எதிர்கொள்ள நேரிட்டது. இந்தத் தோல்வியை திமுக உடன்பிறப்புகளால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சியின் அடித்தள அமைப்பைப் புதுப்பிக்கும் நோக்கில், திமுக தலைமை 36 பேர் கொண்ட சிறப்பு கள ஆய்வுக் குழுவை அமைத்தது. இக்குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதி வாரியாக முன்னணி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்துக்களைச் சேகரித்து அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதனடிப்படையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஏற்கனவே இருந்த 78 கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   

இருப்பினும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை கட்சிக்குள் புதிய சலசலப்புகளையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. 1, 2 மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில், பல மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகள் கைநழுவிப் போயுள்ளன. உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் சக்கரபாணி ஆகியோரின் அதிகாரம் குறைக்கப்பட்டதாகக் கூறி, அவர்களின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

   

இதேபோன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்டச் செயலாளர்களின் தொகுதிகள் பிரிக்கப்பட்டதற்கு உடன்பிறப்புகள் தங்களது எதிர்ப்பை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஒழுங்காகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்களின் தொகுதிகளைப் பிரித்து வழங்கிவிட்டு, சிறப்பாகப் பணியாற்றியவர்களின் தொகுதிகளை அவர்களிடமே தக்கவைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. புதிய மாவட்டச் செயலாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியான பிறகு, கட்சிக்குள் இருக்கும் இந்த உட்கட்சிப் பூசல் மேலும் வெடிக்க வாய்ப்புள்ளதாக திமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.