மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க பயன்படுத்தும் ‘இ-சலான்’ இயந்திரத்தை ஒத்த ஒரு கருவியை கையில் வைத்திருக்கும் 22 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் அந்த இயந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு கேமராவின் அருகில் காட்டுவதும், பின்னர் அதனை மற்றொரு நபரிடம் கொடுப்பதும் பதிவாகியுள்ளது. காவல் துறையினர் மட்டுமே பயன்படுத்த வேண்டிய இந்த முக்கிய கருவி எப்படி ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கைக்கு வந்தது என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மன்சூர் ஷேக் என்ற சமூக ஆர்வலர் இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவை தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், அந்த இ-சலான் இயந்திரம் ‘தேவ் காம்ப்ளே’ என்ற போக்குவரத்து காவலருக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது என்றும், ஆனால் அதனை தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தி வருவது குர்லா போக்குவரத்து பிரிவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மும்பை போக்குவரத்து காவல்துறை உடனடியாக இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ பொதுமக்களிடையே பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அரசு அதிகாரிகள் கையாள வேண்டிய இயந்திரம் ஒரு சாதாரண நபரின் வசம் எப்படி சென்றது என இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் கையில் இருக்கும் கருவி உண்மையிலேயே மும்பை போக்குவரத்து போலீசாருடையது தானா அல்லது அது வேறு ஏதேனும் ஒத்த கருவியா என்பது குறித்து காவல் துறையின் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. காவல் துறை இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
