மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே 17 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 11-ஆம் வகுப்பு பயின்று வந்த ரோஹித் சாஹேப்ராவ் தங்கர் என்ற அந்தச் சிறுவன், தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று பாசத்துடன் ராக்கி கயிறு கட்டிக்கொண்டு வீடு திரும்பிய நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பாக, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அத்துடன், “இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் அக்கா; அம்மாவையும் அப்பாவையும் தனியாக விட்டுவிடாதீர்கள், அனைத்தையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், நான் விடைபெறுகிறேன்” என உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, ஆன்லைன் விளையாட்டுகளில் தான் பணத்தை இழந்துவிட்டதாகக் கூறி தனது நண்பர் ஒருவருக்கும் அவர் வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக ரோஹித்தின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். எனினும், அவர்கள் அங்கு செல்வதற்குள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
