திருப்பதி மாவட்டம், சூளூருபேட்டை மண்டலம் கொடபளூரு கிராமத்தில் மனைவியை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான சீனிவாச ராவ் தனது மனைவி பனபாக சியாமளா (35) என்பவரை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். இதனால் கணவனின் தொல்லை தாங்காமல் சியாமளா தனது குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே, மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக அவர் தனது ஊருக்கு வந்தபோது, சமாதானம் பேசுவது போல நடித்து அவரை கணவன் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே சியாமளாவின் சடலம் புடவையால் மூடப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள கணவன் சீனிவாச ராவைத் தேடும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
