“அவளைக் காணோம்” என போலீசிடம் நாடகம்… நண்பன் விரித்த கொடூர வலை… உயிரிழந்த இந்தியப் பெண்… வசமாக மாட்டிய நபர்… வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் டேட்டா அனலிஸ்டாக பணிபுரிந்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயதான நிகிதா ராவ் கோடிஷாலா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் காணாமல் போனதாக அர்ஜுன் சர்மா என்பவர் முதலில் போலீசாரிடம் நாடகமாடிய நிலையில், மறுநாளே சர்மாவின் குடியிருப்பில் கத்திக்குத்து காயங்களுடன் நிகிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு சர்மா உடனடியாக அமெரிக்காவில் இருந்து தப்பித்து இந்தியா வந்துவிட்டார். இதையடுத்து, அமெரிக்க காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பிடியாணை பிறப்பித்தனர்.

சுமார் எட்டு மாதங்களாக இந்தியாவில் தலைமறைவாக இருந்த சர்மாவை பிடிப்பதற்காக நிகிதாவின் குடும்பத்தினர் இந்திய மற்றும் சர்வதேச அதிகாரிகளின் உதவியை நாடினர். இதற்கிடையே, நிதி மோசடி செய்ததாக சர்மாவின் மீது ஹைதராபாத் காவல் நிலையத்திலும் நிகிதாவின் தந்தை ஒரு புகாரை அளித்தார். அதன் அடிப்படையில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. தொடர் விசாரணையின் பலனாக, உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பதுங்கியிருந்த சர்மாவை ஹைதராபாத் போலீசார் வெற்றிகரமாக கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

   

சர்மாவை நிகிதாவின் முன்னாள் காதலர் என அமெரிக்க போலீசார் குறிப்பிட்டதை மறுத்துள்ள அவளது தந்தை, அவர் ஒரு முன்னாள் அறை நண்பர் மட்டுமே என்றும் இருவருக்கும் இடையே பணப் பிரச்சனை இருந்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது சர்மா பிடிபட்டுள்ள நிலையில், அவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்க அரசாங்கம் முறையான கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த முக்கிய கைது நடவடிக்கையின் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான குற்றவாளி ஒப்படைப்பு நடைமுறைகள் தொடங்கியுள்ளதோடு, நிகிதாவின் மரணத்துக்கான முழுமையான காரணங்களும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.