அதிவேகமாக வந்த கார்… அடுத்த நொடியே சரமாரி வெட்டு… தங்கையின் தற்கொலைக்கு அண்ணன் பலிவாங்கிய கொடூரம்… கள்ளக்காதலின் கோர முடிவு…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள சிற்றத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற ஓட்டுநர், கடந்த 25ஆம் தேதியன்று கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பழைய வழக்கு ஒன்றிற்காக, வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பாகல்மேடு என்ற இடத்தின் அருகே அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், அவரது வாகனத்தின் மீது மோதி அவரைக் கீழே தள்ளியது. பின்னர் அக்கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்ததில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையை அரங்கேற்றிவிட்டு தப்பியோட முயன்ற அந்த கும்பலின் கார் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. காருக்குள் ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாகச் செயல்பட்டு காரிலிருந்த மூவரைப் மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வெங்கல் போலீசார், மாரிமுத்துவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட மூவரைக் கைது செய்து விசாரித்து வரும் காவல் துறையினர், தப்பியோடிய மேலும் இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

   

இந்தக் கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கீழானூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற திருமணமான பெண்ணுடன் மாரிமுத்துவுக்கு இருந்த கள்ளத்தொடர்பே இச்சம்பவத்தின் பின்னணியாக அமைந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தொடர்பின் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில், கடந்த ஆண்டு தீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது சகோதரியின் இறப்புக்கு மாரிமுத்துதான் காரணம் என ஆத்திரத்தில் இருந்த தீபாவின் சகோதரர் தீனா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்தப் பழிவாங்கும் கொலையைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.