கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. குறுகிய காலத்திலேயே தனது திறமையால் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தையும் மார்க்கெட்டையும் அவர் உருவாக்கிக் கொண்டார்.
தாயார் தேவிகாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த கனகா, அவரது மறைவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தாயின் மரணமும், தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் அவரைத் திரைத்துறையை விட்டு முற்றிலுமாக விலகச் செய்தன. பல ஆண்டுகளாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட அவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு பலர் அவரை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தும், ஊடகங்களைச் சந்திக்கவோ அல்லது பொதுவெளியில் வரவோ விரும்பாமல் கனகா தொடர்ந்து தனிமையையே தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கனகாவின் நிலை குறித்துத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தாயின் அரவணைப்பிலேயே முழுமையாக வாழ்ந்ததால், நண்பர்கள் வட்டமோ அல்லது வேறு துணையோ இல்லாமல் அவர் இறந்த பிறகு கனகா நிலைகுலைந்து போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தந்தைக்கும் இவர்களுக்கும் சொத்துத் தகராறு இருந்த நிலையில், ஒருமுறை நீதிமன்றத்தில் தன் அருகில் அமர்ந்து நலம் விசாரித்த முதியவரைத் தனது சொந்த அப்பா என்றுகூட அடையாளம் தெரியாமல் கனகா பதில் அளித்த சோகமான நிகழ்வையும் பாலாஜி பிரபு அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
