புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக உடனடியாகப் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைத்தனர். இதற்காக, தீவிர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸில் ரேவதி புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது, ஆம்புலன்ஸில் இணைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் டியூப் எதிர்பாராதவிதமாகத் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட ரேவதி, புதுச்சேரி மருத்துவமனையைச் சென்றடையும் முன்பே வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரைக் காப்பாற்றச் சென்ற ஆம்புலன்ஸிலேயே தொழில்நுட்பக் கோளாறால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
