ஒடிசா மாநிலத்தின் பாலங்கீர் மாவட்டத்தில், பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் ஒன்று சேர்வதற்காக நரபலி என்ற பெயரில் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், அவரது உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அருகே உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சந்தோஷ் கடைசியாக சத்ருக்னா சாஹு (40) என்பவருடன் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சாஹுவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தன்னை விட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் சேருவதற்காகவே இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன், துண்டிக்கப்பட்ட சந்தோஷின் தலையை தனது வீட்டின் பூஜை அறையில் புதைத்து வைத்திருந்ததையும் அவர் வெளிப்படுத்தினார். உடனே சாஹுவின் வீட்டின் பூஜை அறையைத் தோண்டி தலையைக் கைப்பற்றிய காவல்துறையினர், அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
