சென்னை ஃபர்ட்டிலிட்டி சென்டரில் பணிபுரிந்து வந்த சுவேதா கோஷ் என்பவர், அங்கு சிகிச்சைக்காக வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணிடம் கட்டண விவரங்களை விளக்குவதில் ஏற்பட்ட தகவல் தொடர்பு குறைபாடு காரணமாக ரூ. 2 லட்சம் பில் விவகாரத்தில் சர்ச்சை உருவானது. இதனால் மருத்துவமனை நிர்வாகமும், மேலாளர்கள் அந்தோணி மற்றும் பாலு ஆகியோரும் சுவேதா கோஷைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதன் காரணமாக உருவான கடுமையான மன உளைச்சலால், அவர் கடந்த 13-ம் தேதி மருத்துவமனையின் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவேதா, சென்னை ஊடகங்களின் கவனத்தைத் தவிர்க்கும் பொருட்டு, உயர் சிகிச்சை அளிப்பதாகக் கூறி கடந்த 20-ம் தேதி திருப்பதியிலுள்ள அமர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர், நேற்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்பொழுது திருப்பதி ரூயா மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகச் சென்னை அமைந்தகரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழக்கின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொருட்டு, சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளையும், அது தொடர்பான கட்டிட ஆவணங்களையும் காவல் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
