தஞ்சாவூரில் தனியார் பள்ளி ஆசிரியை திவ்யாவும், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் சண்முகசுந்தரராஜும் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றும் திவ்யா, தனது வீட்டில் மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அப்போது, தன்னிடம் நெருங்கிப் பழகி வந்த சண்முகசுந்தரராஜுக்கு டியூஷன் வந்த சிறுமியின் அலைபேசி எண்ணைக் கொடுத்து, இந்த கொடூரச் செயலுக்கு முழு உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளார்.
தாய் அரவணைப்பில் வறுமையில் வாழ்ந்து வந்த அந்த மாணவியின் ஏழ்மை நிலையை ஆசிரியை திவ்யா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சண்முகசுந்தரராஜுடன் அனுசரித்துச் சென்றால் உனது கல்விச் செலவை அவர் பார்த்துக்கொள்வார் என சிறுமியை மூளைச்சலவை செய்துள்ளார். மேலும், கட்டாயப்படுத்தி அவருடன் காரில் அனுப்பி வைத்தும், வீடியோ காலில் பேசவைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் ஓடும் காரில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான அந்தச் சிறுமி, வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் சுமார் 10 மாதங்களாக இதை யாரிடமும் சொல்ல முடியாமல் கடும் மனவேதனை அனுபவித்துள்ளார்.
தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, ஒருகட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட மாணவி, தனது பள்ளித் தலைமையாசிரியையிடம் நடந்த விபரங்களைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், துரிதமாகச் செயல்பட்ட மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். அருப்புக்கோட்டை நிர்மலா தேவி சம்பவத்தை நினைவூட்டும் வகையில், மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற சுயநலத்திற்காக மாணவிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது, கல்வித்துறையின் மீதான நம்பிக்கையைக் குலைத்து பெற்றோர் மத்தியில் பெரும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
