வளைகுடா நாடுகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் நாட்டினரை அங்குள்ள அரசுகள் அதிரடியாக நாடு கடத்தியுள்ளன. மார்ச் 1 முதல் ஜூலை 13 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரப்பூர்வத் தரவுகள் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாகச் சவுதி அரேபியாவிலிருந்து 15,500 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 3,803 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் ஓமன், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருத்தல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல், பொது இடங்களில் பிச்சை எடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விசா விதிமீறல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சங்கள் காரணமாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
