ஜாமீனில் வந்த 14-வது நாள்… காதலி விவகாரத்தில் நண்பனையே போட்டுத்தள்ளிய கொடூரம்… அதிர வைக்கும் CCTV காட்சிகள்…!!

By Gayathri on ஆவணி 22, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 27 வயதான கவுரவ் பங்கஜ் ரக்டே என்ற இளைஞர், சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த சில வாரங்களிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், நரேந்திர நகர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரைப் கொலை செய்தது வேறு யாருமல்ல, இவரைப் போலவே குற்றப் பின்னணி கொண்ட இவரது நண்பரான கவுரவ் ராம்பாவ் ராவுத் மற்றும் அவரது கூட்டாளியும்தான் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்கான முக்கிய காரணம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட முக்கோணக் காதல் விவகாரமே ஆகும். ரக்டே சிறையில் இருந்த காலகட்டத்தில், அவர் உறவில் இருந்த மும்பையைச் சேர்ந்த ‘ராணி’ என்ற பெண்ணுக்கும், ரக்டேவின் நண்பரான ராவுத்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் குற்றச் செயல்களை விடுத்து புதிய தொழில் தொடங்கி, திருந்திய வாழ்க்கையை வாழத் தொடங்கியதை அறிந்த ரக்டே கடும் ஆத்திரமடைந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, சம்பவத்தன்று ராவுத்தின் வீட்டின் மீது அவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

   

இந்தத் தாக்குதலால் அச்சமடைந்து தப்பியோட முயன்ற ராவுத்தை ரக்டே துரத்திச் சென்றபோது, சுந்தர்பன் ஓடைக்கு அருகிலுள்ள ஒரு பாலத்தில் இருவருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ராவுத்தின் கூட்டாளி அபிஷேக் வாஸ்னிக் உதவியுடன், நிலைதடுமாறி விழுந்த ரக்டேவின் கத்தியைப் பறித்து அவரையே இருவரும் குத்திக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரோந்துப் பிரிவு காவலர்கள், தப்பியோடிய ராவுத்தை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது பெல்டரோடி காவல் நிலைய போலீஸார் இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.