தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருத்துவக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் கைகலப்பில் 4 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியச் செயலாளர் தன்ராஜ் தலைமையில் ஆதனூர், மருத்துவக்குடி மற்றும் நாககுடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நடைபெற்ற இக்கூட்டத்தில், கிளைச் செயலாளர் பதவி நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் க.விஜய் என்பவரும், சமீபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயகாந்த் என்பவரும் கிளைச் செயலாளர் பதவிக்கு உரிமை கோரியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் அது கோஷ்டி மோதலாகவும் கைகலப்பாகவும் மாறியது.
இந்த மோதலில் பலத்த காயமடைந்த மு.ஷேசாத்திரி, அவரது தாயார் இந்திராணி, ரா.சிவா, ச.மாலதி, ச.விஜயா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய 6 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கும்பகோணம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சிக் கூட்டத்திலேயே நிர்வாகி பதவிப் போட்டியால் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
