மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதியன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக மூத்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் இப்பணிகளை நேரடியாகக் கண்காணித்துத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், தங்களின் இந்தச் சுட்டிக்காட்டலை ஆட்சியாளர்கள் பக்தியின் அடிப்படையில் புரிந்துகொண்டு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஆன்மீக நகரமான மதுரை தற்போது குப்பைகள் நிறைந்த பகுதியாகக் காட்சியளிப்பதாகவும், குப்பை மேலாண்மையிலும் ஊழல் நடப்பதாகவும் சாடிய அவர், மாசடைந்துள்ள வைகை ஆற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், மகளிருக்கான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய தொகுதி மறுசீரமைப்பு என்பது மிகவும் அவசியமானது என்பதால், அதனை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார். காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழர்களின் மாநில உரிமைகளை பாஜக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனத் திட்டவட்டமாகக் கூறிய அவர், தமிழக வெற்றிக் கழகத்துடனான தங்களின் அரசியல் அணுகுமுறை குறித்தும் விளக்கினார். திமுகவைப் போல எதற்கெடுத்தாலும் த.வெ.க-வுடன் தாங்கள் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும், அவர்கள் தங்களை மென்மையாக அணுகினால் பாஜகவும் அவர்களை அதே போன்றதொரு நட்பான அணுகுமுறையுடனேயே கையாளும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
