பெங்களூருவின் லாங்போர்டு டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாகத் தங்கி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் 20 வயது மாணவி ஒருவரிடம், அந்த வீட்டின் 60 வயது உரிமையாளர் கமலேஷ் குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று மாலை வீட்டில் நிலுவையில் இருந்த பழுதுபார்ப்புப் பணிகளைப் பார்வையிட வந்த கமலேஷ் குமார், மாணவி தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அத்துமீறியுள்ளார்.
மாணவியின் கையில் இருந்த மருதாணியைப் பார்ப்பதாகக் கூறி கையைப் பிடித்து இழுத்து, கட்டாயப்படுத்தி அணைத்துக் கன்னங்களில் முத்தமிட்டுள்ளார். மாணவி விலகிச் செல்ல முயன்றபோதும் தகாத முறையில் தொட்டுத் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்ற அவர், “உனக்கு 10-15 நிமிடங்கள் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எனக்குச் சொல்லு” எனக் கூறிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் காவல் துறையினர் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 74 மற்றும் 75-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து கமலேஷ் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
