காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான சோனியா காந்தி தனது சுயசரிதையை எழுதியுள்ளார். “பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்” என்ற தலைப்பிலான இந்த சுயசரிதை புத்தகத்தை பெங்குயின் பதிப்பகம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களில் ஒன்றான காந்தி குடும்பத்தின் பின்னணி, வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் நினைவுகளை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசவுள்ளதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நாளில் தனது தாயாரின் சுயசரிதை வெளியீடு குறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் மிகவும் உருக்கமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், தனது பெற்றோர் இருவரையும் ஒன்றாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நினைவு கூர்ந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்களை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களால் உங்கள் சுயசரிதை படிக்கப்பட உள்ளது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறவு மற்றும் அரசியல் பயணத்தின் வரலாற்றுப் பதிவாக அமையவுள்ள இப்புத்தகம், பொதுமக்களாலும் ஆதரவாளர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
