ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் வளைவுப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஈபிள் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்ட இந்தப் பாலம், ஆற்று மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் ரியாசி பகுதியில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மாபெரும் ரயில்வே திட்டத்தின் மிக முக்கியப் பகுதியாக இப்பாலம் விளங்குகிறது.
வடக்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் பனிஹால் இடையேயான 111 கிலோமீட்டர் புதிய அகலப்பாதை வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதற்கு முன்பு கத்ரா முதல் சங்கல்தான் வரை மணிக்கு 85 கி.மீ ஆகவும், சங்கல்தான் முதல் பனிஹால் வரை மணிக்கு 75 கி.மீ ஆகவும் இருந்த அதிகபட்ச வேக வரம்பு, தற்போதைய ஒப்புதலுக்குப் பிறகு மணிக்கு 100 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வேக அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, உரிய பாதுகாப்புச் சோதனைகள் அனைத்தும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் பயண நேரம் கணிசமாகக் குறைவதோடு, ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
