தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லபள்ளி பகுதியில் உள்ள நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் பள்ளியின் முதல்வர் கே.ரூபா ரெட்டி (50) ஆகஸ்ட் 11-ஆம் தேதி அவரது வீட்டில் 27 முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் விடுதி அறையில் இருந்த மாணவர்களிடம் பணம் இருந்ததைப் பார்த்த ரூபா ரெட்டி, அவர்களின் பெற்றோரை வரவழைத்துக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், இணையத்தில் யூடியூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் தடையங்கள் இன்றி கொலை செய்வது எப்படி எனத் தேடித் திட்டமிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 11 அன்று, ஒரு மாணவர் வீட்டின் வெளியே காவல் காக்க, மற்றொரு மாணவர் சமையலறை வழியாகச் சென்று ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த ரூ.2.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஐபோனைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொலை நடப்பதற்கு முன் ரூபா ரெட்டி தனது அத்தையிடம் போனில் பேசிக்கொண்டிருந்த போது “பாபு” என்று கூறிய சொல் போலீஸாருக்கு முக்கியத் துப்பாக அமைந்தது. அவர் மாணவர்களை அன்போடு “பாபு” என்று அழைப்பதை அறிந்த போலீஸார், மாணவர்கள் பக்கம் விசாரணையைத் திருப்பினர். 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்த போலிஸார், மோட்டார் சைக்கிளில் சென்ற இரு மாணவர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1.54 லட்சம் பணத்தையும், இரத்தக் கறை படிந்த ரூபாய் நோட்டுகளையும் போலிஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
