சத்தீஸ்கர் மாநிலத்தில், இணையம் வாயிலாக திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களைக் குறிவைத்து அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு புதிய வகையிலான மோசடி அரங்கேறியுள்ளது. ‘பவித்ரா ரிஷ்தா’ என்ற பெயரில் போலி திருமண தகவல் மையத்தை உருவாக்கிய இருவர், அதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பரவலாக வெளியிட்டுள்ளனர். தங்களை நாடி வரும் ஆண்களிடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் குரலை மாற்றும் செயலிகளின் உதவியுடன் பெண் குரலில் பேசி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களின் ஜாதகங்கள் இருப்பதாகவும், திருமணத்தை முடித்துத் தருவதாகவும் உறுதியளித்து பணத்தை கறந்த பிறகு, அந்த ஆண்களின் எண்களைத் துண்டித்துவிட்டு தலைமறைவாகி விடுவதை இந்த கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இந்த நூதன திருட்டு வலைப்பின்னல், அஜய் ரத்தோர் என்ற பெட்ரோல் நிலைய ஊழியர் அளித்த புகாரின் மூலம் தற்செயலாக வெளிச்சத்திற்கு வந்தது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அவசர உதவி எனக் கூறி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அஜயைத் தொடர்புகொண்டு 2,000 ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெற்றுள்ளார். இதன் பின்னர் அஜயின் வங்கி கணக்கு திடீரென முடக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்து அவர் காவல்துறையை அணுகினார். அந்த குறிப்பிட்ட பணப்பரிமாற்றம் ஏற்கனவே பதிவான ஒரு சைபர் குற்றத்துடன் தொடர்புடையது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த மெகா மோசடியின் மூளையாகச் செயல்பட்ட லக்ஷ்மி நாராயண் சாஹு மற்றும் சோனு சாஹு ஆகிய இருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், இந்த குற்றவாளிகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஜாஞ்ச்கிர்-சம்பா, ராய்ப்பூர் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது. AI போன்ற நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கொண்டு, மக்களின் திருமண ஆசையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்த மோசடியை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். இணையதளம் மற்றும் செயலிகள் மூலமாக வரன் தேடுபவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முழுமையாக தீர விசாரித்த பின்னரே பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
