சென்னை அசோக் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 22 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகளுக்கான பெயர் பலகைகள் பொருத்துவதற்காக விடப்பட்ட ரூ. 33 லட்சம் மதிப்பிலான டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க மிகக் குறைந்த நாட்களே அவகாசம் வழங்கப்பட்டதும், அதிகாரிகளால் சில குறிப்பிட்ட காண்ட்ராக்டர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பான உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், காண்ட்ராக்டர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழலை அதிகாரிகள் உருவாக்கியது கேள்விக்குறியானது. குறைந்த மதிப்புடைய இந்த டெண்டரிலேயே இத்தகைய குளறுபடிகள் நடந்தால், பெரிய அளவிலான திட்டங்களில் எவ்வாறு வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படும் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதனிடையே, கோவை கட்டுமான சங்கமும் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வீட்டு மனைகளாக வகை மாற்றம் செய்யும் கோப்புகளைத் தேவையின்றி கிடப்பில் போட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அச்சங்கம், வெளிப்படையான நிர்வாகம் என்ற அரசின் கொள்கைக்கு மாறாகச் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், காரணமின்றி தாமதப்படுத்தப்படும் கோப்புகளுக்கு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு விரைந்து ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
