உஷார்..! AI செயலிகளைப் பயன்படுத்துபவரா?… உடனே உஷாராகுங்கள்…! காவல்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

By Gayathri on ஆவணி 19, 2026

Spread the love

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள் வரை அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. வேலைகளை எளிதாக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் ஏ.ஐ பெரிதும் உதவினாலும், இதைப் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. நாம் பகிரும் தரவுகள் சேமிக்கப்படுவதால், தகவல்கள் திருடப்பட்டு ‘டீப்பேக்’, ஆள்மாறாட்டம் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகள் போன்ற சைபர் குற்றங்கள் அதிகரிக்கும் பேராபத்து உள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், திருப்பூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கான ஏ.ஐ பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, எந்தவொரு ஏ.ஐ தளத்திலும் பயனர்கள் தங்களின் ரகசியக் குறியீடுகள், வங்கி விவரங்கள், ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற மிக முக்கியமான தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யக் கூடாது. மேலும், உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு ஏ.ஐ வழங்கும் பொதுவான பதில்களை நம்பி சுயமாக மருந்து உட்கொள்ளக் கூடாது; தகுதியான மருத்துவரின் ஆலோசனையே சிறந்தது. அதேபோல, திருமணம், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சார்ந்த முக்கிய முடிவுகளுக்கு ஏ.ஐ-யை முழுமையாகச் சார்ந்திருக்காமல், நம்பகமானவர்களுடன் கலந்தாலோசித்தே சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

   

ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது மனித மூளைக்கு மாற்று அல்ல, அது வெறும் வழிகாட்டும் கருவி மட்டுமே என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திருப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. தனிப்பட்ட புகைப்படங்களையோ, வங்கி ரகசியங்களையோ இதில் பதிவேற்றுவது பண இழப்புக்கும் மன உளைச்சலுக்கும் வழிவகுக்கும். மேலும், பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ இந்தத் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தினால் சைபர் குற்றப் பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில்நுட்பத்தை விழிப்புணர்வோடும் பொறுப்போடும் பயன்படுத்தினால் மட்டுமே நமது டிஜிட்டல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.