சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில், மாணவிகளுக்கு மது மற்றும் போதைப்பொருள் கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் துப்புரவுப் பணியாளரான ராதிகா மற்றும் அவரது நண்பரான ரகுபதி ஆகியோர் இணைந்து இரண்டு மாணவிகளிடம் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது, பெற்றோர்கள் விடுதிக்குச் சென்றபோது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராதிகா மற்றும் ரகுபதியை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் விடுதி சமையலர் கலைச்செல்வியின் தொடர்பு குறித்தும், வேறு மாணவிகள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு விடுதிக்குள்ளேயே மாணவிகளுக்கு நிகழ்ந்த இந்த பாலியல் அத்துமீறல், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, பள்ளிக்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அதிகாரிகள் விடுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விடுதி மேலாளர்கள் மற்றும் காப்பாளர்கள் இரவு நேரங்களில் கட்டாயம் விடுதியிலேயே தங்கியிருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
