தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த குப்புசாமி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றுவதற்காகக் கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் குப்புசாமி உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய உரிய நிவாரணமும் உதவிகளும் இன்னும் சென்று சேரவில்லை.
கணவரின் திடீர் மறைவால் வறுமையிலும் கடும் மன உளைச்சலிலும் தவித்து வரும் அவரது மனைவி உச்சிமகாளி, கடந்த 54 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தொடர்ந்து தட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மீண்டும் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அம்மனுவில், தன் கணவர் பணியின் போது உயிரிழந்ததால் அவருக்குச் சேர வேண்டிய உரிய நஷ்ட ஈட்டையும், குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய ஓய்வூதியத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனக் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
