கொழுந்து விட்டு எரிந்த தீ…! மின்சாரம் பாய்ந்து வெடித்த வாகனம்… அலறியடித்துக் குதித்த 60 பயணிகள்… நொடியில் நடந்த விபரீதம்…!!

By Gayathri on ஆவணி 18, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் கரோண்டா பகுதியிலிருந்து சுமார் 60 பக்தர்கள் ராஜஸ்தானுக்குக் கேண்டர் வாகனம் ஒன்றில் சனிக்கிழமை இரவு புறப்பட்டனர். அதிகப் பயணிகள் அமரும் வகையில் இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டு அந்த வாகனத்தின் உயரம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, மினி பைபாஸ் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக வாகனத்தின் மேற்கூரை உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதனால் மின் கம்பி அறுந்து வண்டியின் மீது விழுந்ததில், வாகனம் முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியது. தீப்பொறியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்து வாகனத்திலிருந்து தப்பிக் குதிக்க முயன்றனர். இந்தத் திகிலான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளன.

இந்தக் கொடூர விபத்தைக் கண்ட அப்பகுதிவாசியும், 45 வயதான முன்னாள் ராணுவ வீரருமான நரேஷ் குமார் என்பவர் உடனடியாக மீட்புப் பணியில் களமிறங்கினார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வாகனத்தில் சிக்கியிருந்த பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் துணிச்சலாக ஈடுபட்ட அவர், துரதிர்ஷ்டவசமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் கர்னால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் விபத்து குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலரின் உயிரைக் காப்பாற்றித் தன்னுயிரை ஈந்த முன்னாள் ராணுவ வீரர் நரேஷ் குமாரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டதாக கர்னால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.