செய்தியாளர்களைத் தாக்கிய வழக்கின் பின்னணியில், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதித் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் கபில் மற்றும் அவருடைய சகோதரர் தனஞ்செழியன் ஆகிய இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் அரசு தாமதிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தன.
இதன் தொடர்ச்சியாக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் ஆபாசமாகப் பேசுதல் [BNS-296(b)], தன்னிச்சையாகக் காயப்படுத்துதல் [BNS-115(2)] மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தல் [BNS-351(2)] ஆகியப் பிரிவுகளின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பாய்ந்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்ற தீவிரமான தகவல் பரவி வருகிறது.
