சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாநகர் கொண்டாலாம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 4 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைத் தேடி வந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரையும் அடையாளம் கண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படவுள்ளனர்; மற்ற இருவர் மீது போக்சோ கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
