நரம்பில் ஏறிய பாம்பு விஷம்…. தம்பியின் உயிரைக் காப்பாற்ற 150 முறை ஓங்கி அறைந்த அண்ணன்… ஆஸ்பத்திரியில் நடந்த பகீர் சம்பவம்…..!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது வைக்கோல் மூட்டைக்குள் இருந்த விஷப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது கையைக் கடித்தது. பாம்பு கடிபட்ட சில நிமிடங்களிலேயே விஷம் ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கத் தொடங்கியது. இதனால் அருணுக்குக் கடுமையான மயக்கம் ஏற்பட்டு கண்கள் சொருகும் ஆபத்தான நிலை உருவானது.

தம்பியின் நிலையைக் கண்டு பதறிய அண்ணன் ஆகாஷ், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். வழியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வரும் சிவம் சர்மா என்பவரின் உதவியோடு, அருண் அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அருணைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கத் தொடங்கிய போதிலும், நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் கோமா நிலைக்குச் செல்லும் அபாயம் இருப்பதாக எச்சரித்தனர்.

   

சிகிச்சை பலனளிக்க அருண் எந்தச் சூழ்நிலையிலும் தூங்கிவிடக் கூடாது என்றும், சுயநினைவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர். இதையடுத்துத் தம்பியின் அருகிலேயே நின்ற ஆகாஷ், அருணின் பெயர் சொல்லிச் சத்தமாகக் கூப்பிட்டவாறே அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்து விழிப்புடனேயே வைத்திருந்தார். தம்பியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 150-க்கும் மேற்பட்ட முறை அவர் அருணின் கன்னத்தில் அறைந்து சுயநினைவைத் தக்கவைத்தார்.

   

மருத்துவர்கள் அடுத்தடுத்து 15 விஷமுறிவு ஊசிகளை செலுத்தி அருணின் உடலில் பரவிய விஷத்தை முறித்தனர். அண்ணனின் அசைக்க முடியாத பாசப் போராட்டமும், மருத்துவர்களின் துரிதமான சிகிச்சையும் சேர்ந்து அருணை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்தன. தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலம் பெற்று வரும் அருணின் உயிரைக் காக்க அண்ணன் எடுத்த இந்த வினோதமான முயற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.