முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள கருத்துகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவை அபகரிக்க நினைத்தால் CM விஜய் உயிரோடு இருக்க மாட்டார் என RB உதயகுமார் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வீட்டிற்கு ஒரு அதிமுகவினர் தற்கொலை படையாக மாறத் தயங்க மாட்டோம் என கூறியுள்ளார். ஏற்கெனவே CM விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதற்காக அவரை கைது செய்யக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக. மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மாற்று அரசியல் மற்றும் புதிய தலைமுறையினருக்கான கட்சி என்ற முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட த.வெ.க., தற்போது அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைத் தன் பக்கம் இழுத்து அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் சாடினார். மகளிர் உரிமைத்தொகை, இலவச எரிவாயு சிலிண்டர்கள், இளைஞர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியும் சரியாக நிறைவேற்றப்படாத நிலையிலும், அரசு தொடர்ந்து கடன் வாங்கி வருவதாகக் குறிப்பிட்டார். சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தித் தன் பிம்பத்தை மட்டுமே முதலமைச்சர் விஜய் கட்டமைத்து வருவதாகவும், அ.தி.மு.க.வின் செல்வாக்குமிக்க நிர்வாகிகளைக் கட்சிக்கு அழைத்து வருவதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்.பி. உதயகுமார் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “அதிமுகவை அபகரிக்க முயற்சித்தால் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள் கட்சியின் உரிமையை மீட்க எதையும் செய்யத் தயங்க மாட்டோம்” என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க.வைக் குறிவைப்பதை விடுத்து, மக்கள் பிரச்சனைகளான வேலைவாய்ப்பு, விவசாயம், காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், முதலமைச்சரை அச்சுறுத்தும் தொனியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் இவரது கருத்துகள் பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளன.
