தையல் பிரிந்த கொடியா? நாட்டுப்பற்றுக்கே விழுந்த அடியா?… தேசியக் கொடிக்கு நேர்ந்த அவமானம்… சமூக வலைதளங்களில் கொதிக்கும் மக்கள்…!!

By Gayathri on ஆவணி 15, 2026

Spread the love

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி டெல்லியில் பிரதமர் மோடியும், சென்னையில் முதலமைச்சர் விஜய்யும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தையும், அதற்காகப் போராடிய தியாகிகளின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியத் தபால் துறை சார்பாக 25 ரூபாய்க்கு தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விற்பனை இலக்கை அடைவதற்காகக் கொடுக்கப்பட்ட கொடியை விலைக்கு வாங்கிய நபர் ஒருவர், அதன் தரம் குறித்து கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். கொடியைக் கம்பத்தில் செருகுவதற்கான தையல்கள் பிரிந்த நிலையிலும், அதன் வடிவமைப்பு தேசியக் கொடியின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் மிக மோசமாகத் தைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

   

பணம் கொடுத்து வாங்கும் நுகர்வோர் என்ற அடிப்படையில், அரசுத் துறை வழங்கும் ஒரு புனிதமான பொருள் இவ்வளவு தரமற்றதாக இருப்பதை எங்கு சென்று புகாரளிப்பது என அவர் வேதனை தெரிவித்துள்ளார். தலைவர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், இதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமும், நாட்டுப்பற்றின்மையும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.