திமுகவின் உட்கட்சி அமைப்பில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், விரைவில் மறுசீரமைப்புக்கான செயற்குழு கூட்டத்தைக் கூட்டக் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதில் கிளைக் கழகம் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரையிலான நியமனங்கள் மற்றும் உட்கட்சித் தேர்தல் முறைகள் குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடையாது என்ற முக்கியத் தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்த முதற்கட்டமாகத் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அதன்பின்னர் முறைப்படி கழகத் தேர்தல்கள் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
கட்சியின் நிர்வாகப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வார்டு மற்றும் தொகுதி அளவிலான பிரிவுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10 வாக்குச்சாவடி பாகங்களுக்கு ஒரு கிளைச் செயலாளர், 40,000 பேருக்கு ஒரு வட்டச் செயலாளர் மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மூன்று பகுதிச் செயலாளர்கள் எனப் புதிய வரைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் மொத்தமாக 100 முதல் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கத் தலைமை திட்டமிட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பின் கீழ், சென்னை மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், எம்பி பரந்தாமன், கே.கே.நகர் தனசேகர் ஆகியோருக்குப் புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அண்ணாநகர் எம்.எல்.ஏ எம்.கே. மோகனின் மகன் கார்த்திக் மற்றும் சோழிங்கநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோருக்கும் மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
